உலக நாடுகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நேரடி ராணுவ மோதல், தற்போது ஒரு போராகவே உருவெடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டர், ஈரானிய ட்ரோன் மோதி வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார்.
இந்தத் தாக்குதலில் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவுகளில் உள்ள ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் தளங்களை அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் துல்லியமான ஏவுகணைகள் மூலம் தகர்த்துள்ளன. இது ஒரு தற்காப்பு நடவடிக்கை என்றும், அமெரிக்கப் படைகள் மீதான அத்துமீறலுக்கு வழங்கப்பட்ட சரியான பதிலடி என்றும் அமெரிக்க மத்திய கமாண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஈரான் தரப்பிலிருந்து உடனடியாகவும் மிகக் கடுமையாகவும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையான ஐ.ஆர்.ஜி.சி, பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் சக்திவாய்ந்த 5-வது கடற்படைத் தளம் மீது ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றால் இன்னும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் ஈரானின் மன உறுதியைச் சோதிக்கும் செயல் எனச் சாடியுள்ள அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, “நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேறுங்கள்” என எச்சரித்ததோடு, எந்தவொரு அச்சுறுத்தலையும் ஈரான் சும்மா விடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் இந்த ராணுவப் பதற்றம் காரணமாகச் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தனது முதற்கட்டத் தாக்குதல்களை நிறைவு செய்துள்ளதாகக் கூறினாலும், இரு நாடுகளும் தங்களின் ராணுவ பலத்தை முழுமையாகத் தயார் நிலையில் வைத்துள்ளன.
குறிப்பாக, ஈரானின் சிரிப் மாவட்டத்தில் உள்ள தகவல் தொடர்பு கோபுரங்கள் மற்றும் நீர் சேமிப்புத் தொட்டிகள் கூட அமெரிக்கத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் போரை நிறுத்த இராஜதந்திர முயற்சிகள் நடைபெற்று வந்த வேளையில், இந்தத் திடீர் ராணுவ மோதல்கள் மூன்றாம் உலகப்போர் ஏற்படுமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே விதைத்துள்ளது.
