‘ஈரான் இனி எழவே முடியாது!’ நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் நீடித்து வந்த ஏவுகணைத் தாக்குதல்கள் தற்காலிகமாக ஓய்ந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள ஒரு அதிரடி அறிக்கை இப்போது உலக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “தற்போது நாங்கள் தாக்குதல்களை நிறுத்தி வைத்திருக்கிறோம், ஏனென்றால் ஈரானின் பயங்கரவாத ஆட்சி எங்களைத் தாக்குவதை நிறுத்திவிட்டது.

ஆனால், ஈரான் மீண்டும் ஒருமுறை தவறு செய்யத் துணிந்தால், எங்களின் பதிலடி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான பேரிடியாக இருக்கும்” என்று நெதன்யாகு பகிரங்கமாக எச்சரித்துள்ளார். சுமார் ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இந்த மோதலில், இஸ்ரேல் தற்போது ஒரு மிக வலுவான நிலையில் இருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தனது உரையில் கடந்த கால வெற்றிகளைப் பட்டியலிட்ட நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகர்த்ததுடன், அந்த நாட்டின் உயரிய தலைவர்களை வீழ்த்தியதையும் நினைவு கூர்ந்தார். “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கப் போவதில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என அவர் மீண்டும் ஒருமுறை சபதம் செய்துள்ளார். அதேபோல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராகவும் இஸ்ரேல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் மற்றும் லட்சக்கணக்கான ஏவுகணைகளுடன் இஸ்ரேலை அழிக்கத் திட்டமிட்ட ஹிஸ்புல்லாவின் சதி முறியடிக்கப்பட்டு, அதன் தலைமைச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். “ஈரானும் ஹிஸ்புல்லாவும் இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் பலவீனமடைந்துள்ளன, ஆனால் எங்கள் போராட்டம் இன்னும் முடியவில்லை” என்பதே நெதன்யாகுவின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.

சமீபத்தில் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணை வீச்சு குறித்தும் நெதன்யாகு தனது விளக்கத்தை அளித்துள்ளார். “எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடி கொடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அதன் ஒரு பகுதியாகவே ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார இலக்குகள் மீது நாங்கள் துல்லியமானத் தாக்குதல்களை நடத்தினோம்” என அவர் நியாயப்படுத்தியுள்ளார். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

தனது உரையின் இறுதியில் அதிபர் டிரம்பைப் பற்றித் தந்திரமாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, “எனது நண்பர் டிரம்புடனான உரையாடல்களை நான் மதிக்கிறேன், அதே நேரத்தில் இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். டிரம்பின் அமைதி முயற்சி ஒருபுறம் இருந்தாலும், இஸ்ரேல் தனது பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதைத் தான் இந்த அறிக்கை உணர்த்துகிறது. மத்திய கிழக்கில் நிலவும் இந்தத் தற்காலிக அமைதி நீடிக்குமா அல்லது மீண்டும் போர் வெடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News