மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம், தற்போது இந்திய ஊழியர்களின் உயிர்களுக்கே ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. ஓமன் கடல் பகுதியில் சுமார் 15 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த ‘மேரிவெக்ஸ்’ என்ற சரக்குக் கப்பல் மீது, அமெரிக்கப் போர் விமானங்கள் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது. பலாவ் நாட்டு கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில், கேப்டன் உட்பட 24 இந்தியச் சிப்பந்திகள் பணியாற்றி வந்தனர். அமெரிக்காவின் இந்தத் திடீர் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு, கப்பல் மெல்ல மெல்ல நடுக்கடலில் மூழ்கத் தொடங்கிய அந்தத் திக் திக் நிமிடங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அமெரிக்கக் கடற்படையின் யு.எஸ்.எஸ் ஆப்ரஹாம் லின்கால்ன் என்ற பிரம்மாண்ட விமானந்தாங்கி கப்பலில் இருந்து கிளம்பிய எஃப்-ஏ-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி, இந்த மேரிவெக்ஸ் கப்பல் ஈரான் துறைமுகத்தை நோக்கிப் பயணிக்க முயன்றதே இந்தத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கப்பலை செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதன் இயந்திரம் மற்றும் வழிநடத்தல் பகுதிகளைத் துல்லியமாகக் குறிவைத்து அமெரிக்கா ஏவுகணைகளை வீசியுள்ளது. இதில் கப்பல் பற்றி எரியத் தொடங்கியதும், அதிலிருந்த இந்திய ஊழியர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ‘எஸ்.ஓ.எஸ்’ எனப்படும் அவசர உதவிச் சிக்னல்களை அனுப்பத் தொடங்கினர்.
இந்தச் சிக்னலைப் பெற்ற ஓமன் நாட்டு அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர், மின்னல் வேகத்தில் செயல்பட்டு நடுக்கடலில் தவித்துக் கொண்டிருந்த 24 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் ஓமன் அரசுடன் இணைந்து இந்த மீட்புப் பணியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தனர். நல்லவேளையாக இந்தத் தாக்குதலில் இந்திய ஊழியர்கள் யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றும், அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட அந்த 24 இந்தியர்களும் இன்னும் இரண்டு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த மோதல் போக்கு, சர்வதேச கடல் வழித்தடங்களில் பயணிக்கும் அப்பாவி ஊழியர்களைப் பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல்கள் வளைகுடா பிராந்தியத்தில் புதிய போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளன. பொருளாதாரத் தடைகளுக்காக மனித உயிர்களைப் பணையம் வைக்கும் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச அளவில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
