அண்ணாமலைக்கு காத்திருக்கும் அதே சறுக்கல்? பாஜகவை பிரிந்த தலைவர்களின் கதி ‘இதுதான்’!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி ‘இது நம்ம இயக்கம்’ எனத் தனது தனிப்பயணத்தைத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பாஜகவை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கும் முதல் நபர் அண்ணாமலை அல்ல. இதற்கு முன்னதாக உத்திரப் பிரதேசத்தில் கல்யாண் சிங், மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதி போன்ற ஜாம்பவான்கள் தங்களின் செல்வாக்கான காலத்தில் பிரிந்து சென்ற வரலாறுகள் நமக்கு உண்டு.

ஆனால், அவர்கள் சந்தித்த தேர்தல் முடிவுகள் மிகவும் கசப்பானவை. உ.பி-யில் பாஜக ஆட்சி அமையக் காரணமான கல்யாண் சிங், தனிக்கட்சி தொடங்கி 403 தொகுதிகளில் வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றார். அதேபோல் மத்தியப் பிரதேசத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த உமா பாரதி, தனிக்கட்சி தொடங்கி வெறும் 6 இடங்களையே பிடித்தார். இறுதியில் இவர்கள் அனைவரும் மீண்டும் பாஜகவிலேயே தஞ்சமடைய வேண்டிய சூழல் உருவானது.

ஜார்க்கண்டின் முதல் பாஜக முதலமைச்சர் பாபுலால் மராந்தி மற்றும் டெல்லியின் மதன் லால் குரானா ஆகியோரும் இதே போன்ற முயற்சிகளை எடுத்துத் தோல்வியைச் சந்தித்தனர். குஜராத்தில் மோடி அலை வீசியபோது, முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் தனிக்கட்சி தொடங்கி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, பின்னர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பினார்.

தென்னிந்திய அரசியலைப் பொறுத்தவரை, கர்நாடகாவின் பி.எஸ். எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கி பாஜகவின் வெற்றியைத் தடுத்தாரே தவிர, அவரால் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. வாக்கு சதவீதம் ஒற்றை இலக்கத்தில் சுருங்கியதால், அவரும் மீண்டும் பாஜகவிலேயே இணைந்தார். இந்தப் பட்டியல் உணர்த்தும் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், பாஜகவின் கட்டமைப்பில் இருந்து வெளியேறிய தலைவர்கள் பெரும்பாலும் தனித்துச் சோபிக்க முடியவில்லை என்பதுதான்.

ஆனால், மற்ற மாநிலத் தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே ஒரு மிக முக்கியமான வேறுபாடு உள்ளது. கல்யாண் சிங், உமா பாரதி அல்லது எடியூரப்பா போன்றவர்கள் பாஜக ஏற்கனவே அசுர பலத்துடன் இருந்த மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருந்து வெளியேறினார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பாஜக இன்னும் ஒரு பிரதான சக்தியாக உருவெடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில்தான் அண்ணாமலை வெளியேறியுள்ளார்.

வடமாநிலத் தலைவர்களுக்கு ஏற்பட்ட அதே சறுக்கல் நிலை அண்ணாமலைக்கும் ஏற்படுமா? அல்லது தமிழ்நாட்டின் தனித்துவமான பிராந்திய அரசியல் இவருக்குக் கைகொடுக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. அண்ணாமலையின் இந்த அதிரடி வியூகம் வெற்றியைத் தருமா அல்லது பழைய வரலாற்றை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News