தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற விரும்புவோருக்கு ஆசிரியர்கள் தகுதித் தேர்வு மிகவும் அவசியமானதாகும். இந்த தேர்வை ஆண்டுதோறும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. TET தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை ஆசிரியர்களாக பணிபுரிய விரும்புபவர்கள் தாள் ஒன்றும், 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் விரும்புவர்களுக்கு இரண்டாம் தாளும் நடத்தப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் TET தேர்வு குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் பணியில் தொடருவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டு ஆண்டுகளில் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், பணி ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே மீதமுள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு TET தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்ட தேர்வு ஜூலை 4,5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாடு அரசு கல்வி, கல்விசார் பணிகள் தொடர்பாக அரசிதழ் வெளியிட்ட தகவலின்படி, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேர்வு தேவையில்லை. ஆனால் PSHM, MSHM மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேர்வு கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் போது 18 சதவீதம் தொடக்க கல்வித்துறையில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால், பதவி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் இந்த அறிவிப்பை பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
