தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தவும் முதல்வர் விஜய் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் தமிழக அரசு 16 அம்சங்கள் அடங்கிய முக்கிய சுற்றறிக்கையை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வது, நகர்ப்புறத் தூய்மையைப் பராமரிப்பது மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை வலுப்படுத்துவது ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள், பொதுக் கழிப்பிடங்கள் ஆகியவற்றை உயர் அதிகாரிகள் தினமும் நேரில் ஆய்வு செய்து தடையற்ற தூய்மையை உறுதி செய்ய வேண்டும். அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி நேரத்திற்கு முன்பாகவே சாலைகளை கூட்டிப் பெருக்கி தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுச் சுவர்களில் கண்டபடி போஸ்டர்கள் ஒட்டுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போஸ்டர்கள் ஒட்ட அனுமதிக்கப்படும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை வலுப்படுத்த சொத்து வரி மற்றும் தொழில் வரி நிலுவைகளை வசூலிக்க வாராந்திரக் கூட்டங்கள் நடத்த வேண்டும். நிலுவைத் தொகையை முழுமையாக வசூலிப்பதோடு, நடப்பு காலாண்டு இலக்குகளையும் அடைய அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.கட்டிடத் திட்ட அனுமதிகளில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது. வேண்டுமென்றே தாமதம் செய்பவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரப் பகுதிகளில் பசுமையை அதிகரிக்க ஒதுக்கப்பட்ட திறந்தவெளி நிலங்கள் மற்றும் நீர்நிலைகளைச் சுற்றி மரக்கன்றுகளை நட வேண்டும். சாலை ஓரங்களில் நடப்படும் மரக்கன்றுகள் கால்நடைகளால் சேதமடையாமல் இருக்க குறைந்தது 5 அடி உயரமுள்ள கன்றுகளை நடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறன் பெரிதும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
