சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக..பாவம் இபிஎஸ்

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவில் இருந்து மூன்று எம்.எல்.ஏக்கள் விலகி
தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் ஏற்கனவே உட்கட்சிப் பிரச்சினையில் சிக்கியுள்ள அதிமுகவில் புதிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேலுமணி தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு 3 எம்.எல்.ஏக்கள் திரும்பியிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ன எதிர்பார்ப்பு அதிமுகவில் அதிகரித்துள்ளது.

வேலுமணி – சண்முகம் அணிக்கு ஆதரவாக இருந்து வந்த மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மூவரும் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அந்த கடிதங்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார் இதனிடையே, ராஜினாமா கடிதத்தை வழங்கிய உடனேயே, இந்த மூன்று பேரும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதையடுத்து, அந்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தி வந்தது. இதன் காரணமாக சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணிக்கும், எடப்பாடி பழனிசாமி அணிக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாக மாறியது. இந்த சூழலில், சில எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பத் தொடங்கியிருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மறுபுறம், சி.வி.சண்முகம் அணியினர் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து, கொறடா மற்றும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால், அதிமுகவில் அதிகாரப் போட்டி இன்னும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. மூன்று எம்.எல்.ஏக்கள் நேரடியாக ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருப்பது, அதிமுகவினரிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தனது அணியை வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் தவெக தொடர்ந்து சில எம்.எல்.ஏ.க்களை இழுக்கலாம் என சொல்லப்படுகிறது.

Related News

Latest News