CSK-வுக்கு விழுந்த அடுத்தடுத்த அடி! ஒட்டுமொத்த அணிக்கும் விழுந்த இடி!

ஐபிஎல் 2026 சீசனில் இருந்து சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது மட்டுமல்லாமல், அந்த அணியின் ஒட்டுமொத்த வீரர்களுக்கும் ஐபிஎல் நிர்வாகம் ஒரு இமாலய அபராதத்தை விதித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில், 89 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே படுதோல்வியைச் சந்தித்தது.

இந்தத் தோல்வியோடு சிஎஸ்கே-வின் பிளே-ஆஃப் கனவு கலைந்துவிட்ட நிலையில், போட்டிக்குப் பிறகு அந்த அணிக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததற்காக, அதாவது ‘ஸ்லோ ஓவர் ரேட்’ விதிமுறையை மீறியதற்காக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் இரண்டாவது முறையாக சிஎஸ்கே இந்தத் தவறைச் செய்திருப்பதால், கேப்டன் மட்டுமல்லாமல் விளையாடிய 11 வீரர்கள் மற்றும் இம்பாக்ட் பிளேயர் என ஒட்டுமொத்த அணிக்கும் தலா 6 லட்சம் ரூபாய் அல்லது ஒரு போட்டி ஊதியத்தில் 25 சதவீதத்தை அபராதமாக விதிக்க ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

போட்டியின் கள நிலவரத்தைப் பார்த்தால், குஜராத் நிர்ணயித்த 230 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் ‘கோல்டன் டக்’ அவுட் ஆகி ஏமாற்றினார். சிவம் துபே 17 பந்துகளில் 47 ரன்கள் விளாசி ஓரளவுக்குப் போராடிய போதிலும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் சென்னை அணி படுதோல்வியைச் சந்தித்தது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி பந்துவீச்சில் மிரட்டி சிஎஸ்கே-வை பிளே-ஆஃப் ரேசில் இருந்து தூக்கி எறிந்தது.

இந்தத் தோல்வி ஒருபுறம் இருக்க, மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட அவர் களம் காணாதது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும், குறிப்பாக கேப்டன்சி மற்றும் பேட்டிங் வரிசையில் பல புதிய முகங்கள் வர வாய்ப்பிருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். அடுத்த ஆண்டு சிஎஸ்கே மீண்டும் எழுச்சி பெறுமா? உங்கள் கருத்தைக் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.

Related News

Latest News