முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் ‘நண்பர்’ ஸ்ரீநாத்! பின்னணி என்ன?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு முக்கியமான நகர்வு இன்று அரங்கேறியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, இன்று தனது அமைச்சரவையை அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தியுள்ளது.

இன்று பதவியேற்கும் 23 புதிய அமைச்சர்களில், காங்கிரஸைச் சேர்ந்த இருவர் இடம்பெற்றுள்ளதுதான் அரசியல் ரீதியாகப் பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 60 ஆண்டுகள் கழித்து, தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சி முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது மாநில அரசியலில் ஒரு புதிய அணுகுமுறையைத் தோற்றுவித்துள்ளது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு பெயர், தூத்துக்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீநாத். இவர் முதலமைச்சர் விஜய்யின் கல்லூரித் தோழர் மற்றும் 30 ஆண்டுகால நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே. 1992-ல் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில் தொடங்கிய இவர்களது சினிமா பயணம், இன்று கோட்டை வரை நீடித்திருக்கிறது.

இருப்பினும், இந்த நியமனத்தைப் வெறும் ‘நட்பு’ என்கிற ஒற்றை வார்த்தைக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதற்கு ஸ்ரீநாத்தின் தேர்தல் வெற்றியே ஒரு முக்கியச் சான்றாக முன்வைக்கப்படுகிறது. தூத்துக்குடி தொகுதியில் திமுக-வின் மூத்த அமைச்சராக இருந்த கீதா ஜீவனை, சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீநாத் வீழ்த்தியது ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகிறது. எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி, ஒரு முக்கியமான தொகுதியில் ஜாம்பவான்களை எதிர்த்துப் பெற்றுக்கொடுத்த அந்த வெற்றிதான் ஸ்ரீநாத்திற்கு இந்த அமைச்சர் நாற்காலியைப் பெற்றுத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

திரைத்துறையில் துணை நடிகராகவும், இயக்குநராகவும் அனுபவம் கொண்ட ஸ்ரீநாத், கட்சியின் தொடக்கக் காலம் முதலே விஜய்யுடன் இணைந்து களப்பணியாற்றி வருபவர். ஒரு புதிய முதலமைச்சராகத் தனது நம்பிக்கைக்குரியவர்களை அமைச்சரவையில் இணைக்கும் அதே வேளையில், கூட்டணி தர்மத்தையும் விஜய் முன்னெடுத்துச் சென்றுள்ளார்.

அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நிறைந்த ஒரு நிர்வாக அமைப்பில், ஒரு புதிய அமைச்சராக ஸ்ரீநாத் தனது இலாகாவை எப்படி வழிநடத்தப் போகிறார்? நட்பு மற்றும் அரசியல் விசுவாசத்தைத் தாண்டி, நிர்வாகத் திறமையில் அவர் தனது முத்திரையைப் பதிப்பாரா? என்பதே இப்போதுள்ள எதார்த்தமான எதிர்பார்ப்பு.

Related News

Latest News