முதல்வர் விஜய் சொன்ன ‘அந்த’ 2 வாரம்! இப்போ எத்தனை ‘டாஸ்மாக்’ பூட்டு தெரியுமா?

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டி வரும் வேகம் தற்போது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் அதிர வைத்துள்ளது. குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட அவர் பிறப்பித்த அதிரடி உத்தரவு, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த உத்தரவைப் பிறப்பித்துச் சரியாக ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 513 மதுக்கடைகள் கண்டறியப்பட்டு அதிரடியாக மூடப்பட்டுள்ளன. இந்த மின்னல் வேக நடவடிக்கை மக்கள் மத்தியில், குறிப்பாகப் பெண்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த மே 12-ஆம் தேதி டாஸ்மாக் உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், எவ்வித சமரசமும் இன்றி 2 வார காலத்திற்குள் இந்தக் கடைகளை மூட வேண்டும் என விஜய் கெடு விதித்திருந்தார். அதன்படி, தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் உள்ள 717 கடைகளில், 513 கடைகளுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுவிட்டது.

மீதமுள்ள 204 கடைகளையும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முழுமையாக மூடி, முதலமைச்சரின் உத்தரவை 100 சதவீதம் நிறைவேற்ற டாஸ்மாக் அதிகாரிகள் இரவும் பகலும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 60 கால அரசியல் வரலாற்றில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மதுக்கடைகள் வெறும் 7 நாட்களில் மூடப்படுவது இதுவே முதல்முறை என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசின் இந்த அதிரடி ஆட்டம் ஒருபுறம் வெற்றிகரமாக நடந்தாலும், மறுபுறம் டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் ஒருவிதமான கிலியும், அதிருப்தியும் கிளம்பியுள்ளது. எவ்வித முன் தயாரிப்பும் இன்றி, அவசர அவசரமாகக் கடைகளை மூட உத்தரவிட்டதால், கடைகளில் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை எப்படிக் கையாள்வது, கணக்கு வழக்குகளை எப்படி முடிப்பது என்று தெரியாமல் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் மாற்றுப் பணி மற்றும் இடமாற்றக் கொள்கை குறித்து அரசு இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இருப்பினும், ஊழியர்களின் இந்தப் புகார்களைக் கடந்து, மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருப்பதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “மக்களின் நிம்மதியே இந்த அரசின் முதல் முன்னுரிமை” என்று அவர் தொடர்ந்து கூறி வருவதால், எஞ்சிய 204 கடைகளையும் மூடும் பணியில் அதிகாரிகள் சமரசமின்றி ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வார இறுதிக்குள் 717 கடைகளும் மூடப்பட்டதற்கான முழுமையான அறிக்கை முதலமைச்சர் விஜய்யின் மேசைக்குச் செல்ல உள்ளது. விஜய்யின் இந்த முதல் ‘மெகா அதிரடி’ தமிழக மதுபானக் கொள்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Related News

Latest News