தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ள நிலையில், இப்போது அதிமுகவிற்குள் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் அந்த இயக்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி குழுவிற்கும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான மோதல் இப்போது ‘பொதுக்குழு’ என்ற அதிகார மையத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த 25 எம்.எல்.ஏ-க்கள் மீது எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் புகார் அளித்துள்ள நிலையில், “எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அதனைப் பொதுக்குழுவில் வைத்து எடுங்கள், நாங்கள் அதற்குத் தலைவணங்குகிறோம்” என சி.வி. சண்முகம் விடுத்துள்ள சவால், எடப்பாடியின் தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது.
அதிமுகவின் சட்டவிதிகளின்படி, கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகப் ‘பொதுக்குழு’ மட்டுமே இருக்கிறது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையிலான சட்டப் போராட்டங்களின் போது, சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளன.
இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள சி.வி. சண்முகம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சந்தித்தத் தொடர் தோல்விகளைப் பொதுக்குழுவில் விவாதப் பொருளாக மாற்றத் துடிக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுக தொடர் வீழ்ச்சியைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமியின் தவறான கூட்டணி முடிவுகளே காரணம் என்பது இவர்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தியும், அதனை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தியதே இந்தத் தோல்விக்கு அடிப்படை என்று அதிருப்தி குழுவினர் சாடுகின்றனர்.
தேமுதிகவை அரை சதவீத வாக்குள்ள கட்சி என்று விமர்சித்தது மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களை ஒருங்கிணைக்கத் தவறியது என எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டும் சி.வி. சண்முகம், கட்சிப் பதவியிலிருந்து தங்களை நீக்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்று வாதிடுகிறார். ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டுமானால், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இவர்கள் முன்வைக்கின்றனர்.
தற்போதுள்ள விதிகளின்படி, கட்சியின் பொதுச்செயலாளர் பொதுக்குழுவைக் கூட்டாத பட்சத்தில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கோரிக்கை விடுத்தால், 30 நாட்களுக்குள் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டிய கட்டாயம் தலைமைக்கு உண்டு. ஒருவேளை சி.வி. சண்முகம் தரப்பு இந்த விதியைப் பயன்படுத்திப் பொதுக்குழுவைக் கூட்டினால், அங்கு எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவியே பறிபோகும் அபாயம் உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 73 மாவட்டச் செயலாளர்கள் இருப்பதாக ஒரு தரப்பு கூறினாலும், பொதுக்குழு உறுப்பினர்களின் மனநிலை என்ன என்பது ரகசியமாகவே உள்ளது. அதிமுகவின் எதிர்காலம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தப்புமா என்பது இனி வரப்போகும் அந்தப் பொதுக்குழுவின் கையிலேயே இருக்கிறது.
