தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போலவே, தமிழகம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூட வேண்டும் என்று முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவு, மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாகக் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் கடைகளை முதற்கட்டமாக மூட அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், ஒரு பக்கம் மக்கள் இந்தப் பாராட்டி வரும் நிலையில், மறுபக்கம் இந்த முடிவால் தமிழக அரசுக்கு ஏற்படப்போகும் மிகப்பெரிய வருவாய் இழப்பு குறித்த அதிர்ச்சித் தகவல்கள் இப்போது வெளியாகத் தொடங்கியுள்ளன. தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகவும், திமுக அரசு கஜானாவை முழுமையாகக் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும் முதலமைச்சர் விஜய் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார்.
இத்தகைய இக்கட்டான நிதிச் சூழலில், தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் டாஸ்மாக் விற்பனையில் கை வைப்பது ஒரு சவாலான காரியமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானம் அரசுக்குக் கிடைத்துள்ளது. தற்போது முதலமைச்சர் மூடியுள்ள 717 கடைகள் மூலம் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 15,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று மாநில நிதித் துறையின் முன்னாள் தலைமை கணக்காய்வாளர் ஏ. மோகன் தெரிவித்துள்ளார்.
இந்த 15,000 கோடி ரூபாய் இழப்பைத் தமிழக அரசு எப்படி ஈடுகட்டப் போகிறது என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. கடன் சுமை ஒருபுறம் கழுத்தை நெரிக்க, மறுபுறம் வருவாய் இழப்பைச் சமாளிக்க அரசு சில மாற்றுத் திட்டங்களை ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுபானங்களுக்கான கலால் வரி மற்றும் வாட் (VAT) வரியை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், வருவாய் இழப்பைத் தவிர்க்கப் பிரீமியம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விற்கும் ‘எலைட்’ (Elite) கடைகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தவும், ஆன்லைன் மதுபான விற்பனையை ஒரு கூடுதல் வருவாய் ஆதாரமாக ஆராயவும் நிதித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் நலனுக்காகத் துணிச்சலாக 717 கடைகளை மூடிய முதலமைச்சர் விஜய்யின் இந்த முடிவு, சமூக ரீதியாக ஒரு மிகப்பெரிய வெற்றி என்றாலும், பொருளாதார ரீதியாகத் தமிழகத்திற்கு ஒரு அக்னிப் பரீட்சை என்றே சொல்லலாம். கஜானாவை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் புதிய அரசு, இந்த வருவாய் இழப்பைச் சரிசெய்து தனது மற்ற தேர்தல் வாக்குறுதிகளையும் எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி மாற்றங்கள் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுமா அல்லது பொருளாதாரச் சிக்கலில் தள்ளுமா என்ற விவாதம் இப்போதே அரசியல் மேடைகளில் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.
