தமிழக அரசியல் களம் தற்பொழுது செந்தில் பாலாஜி விவகாரத்தால் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது எழுந்த குற்றச்சாட்டு, இன்று வரை அவருக்குப் பெரும் தலைவலியாகவே நீடிக்கிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, தற்போது தமிழக அரசுக்கு ஒரு அதிரடியான கடிதத்தை அனுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராகப் பணமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே பல சோதனைகளை நடத்தியிருந்தனர். இந்த சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஒரு அரசு அதிகாரி அல்லது அமைச்சராக இருந்தவர் மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங்க வேண்டுமென்றால், மாநில அரசின் அனுமதி கட்டாயம் தேவை. கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் இருந்தபோது, இந்த அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமலாக்கத்துறை மீண்டும் தனது பிடியை இறுக்கியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள அந்தப் புதிய கடிதத்தில், செந்தில் பாலாஜியை விசாரிக்க உடனடியாக அனுமதி கோரப்பட்டுள்ளது. முன்னதாக மே 15-ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை, மாநில அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்று ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை வெறும் கடிதத்தை மட்டும் அனுப்பாமல், அதோடு ஒரு ‘பென் டிரைவையும்’ இணைத்து அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. அதில் விசாரணை தொடர்பான ரகசியக் குறிப்புகள், ஆதாரங்கள் மற்றும் புகார் நகல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தலைமைச் செயலாளர் அலுவலகம் இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
தற்போது செந்தில் பாலாஜி திமுக எம்.எல்.ஏ-வாக இருக்கும் சூழலில், முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு இந்த விசாரணைக்கு அனுமதி கொடுக்குமா? அல்லது முந்தைய அரசைப் போலவே காலதாமதம் செய்யுமா? என்பதே இப்போது அரசியல் வட்டாரத்தின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஊழலுக்கு எதிராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள முதல்வர் விஜய்க்கு, இந்த விவகாரம் ஒரு மிகப்பெரிய சோதனையாகப் பார்க்கப்படுகிறது. இதன் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
