சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து கடும் ஏற்ற-இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நிலையில் இருந்தது. குறிப்பாக கடந்த 12-ந்தேதி சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்ததுடன், அதற்கு மறுநாளே தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் விலை மேலும் அதிகரித்தது. அன்றைய தினம் மட்டும் கிராமுக்கு ரூ.670 மற்றும் சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னரும் சவரனுக்கு ரூ.400 உயர்வு ஏற்பட்டதால், விலை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே உருவானது.
ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று தங்க விலை திடீரென சரிவை சந்தித்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.15,050 மற்றும் ஒரு சவரன் ரூ.1,20,400 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை கிராமுக்கு ரூ.100 மற்றும் சவரனுக்கு ரூ.800 குறைந்தது. பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.185 மற்றும் சவரனுக்கு ரூ.1,480 குறைந்தது. இதனால் ஒரே நாளில் மொத்தமாக கிராமுக்கு ரூ.285 மற்றும் சவரனுக்கு ரூ.2,280 வரை விலை குறைந்தது. அதன் விளைவாக ஒரு கிராம் தங்கம் ரூ.14,765 மற்றும் ஒரு சவரன் ரூ.1,18,120 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் தங்க விலை குறைவையே பதிவு செய்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,18,000 ஆகவும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,750 ஆகவும் உள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.290-க்கும், பார் வெள்ளி ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
