உலகப் பொருளாதாரத்தின் அதிகார மையமான அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக கெவின் வார்ஷ் (Kevin Warsh) நியமிக்கப்பட்டுள்ள நிகழ்வு, தற்போது சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஐம்பத்து நான்கு – நாற்பத்தைந்து என்ற மிகக் குறைந்த நூலிழை வித்தியாசத்தில் கெவின் வார்ஷ் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு நெருக்கடியான ஒரு மார்ஜினில் பெடரல் ரிசர்வ் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் உங்கள் வீட்டுத் தங்கம் விலையில் ஏற்படப்போகும் மாற்றங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் கெவின் வார்ஷ், ட்ரம்ப்பின் விருப்பப்படி வட்டி விகிதங்களை அதிரடியாகக் குறைப்பார் என்ற அச்சம் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும்போது, சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு சரிந்து, முதலீட்டாளர்கள் அனைவரும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தை நோக்கிப் படை எடுப்பார்கள்.
இதன் நேரடி விளைவாக, ஏற்கனவே ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாகும் இந்தியச் சூழலில், தங்கம் விலை மேலும் விண்ணைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களின் திருமணக் கனவுகளையும் சேமிப்பையும் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது.
மற்றொரு பக்கம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழலால், சர்வதேச அளவில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 6 சதவீதத்தை எட்டியுள்ளது, இது எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் அதிகம்.
ஒருபுறம் ட்ரம்ப்பின் அழுத்தம், மறுபுறம் எகிறும் பணவீக்கம் என இரண்டுக்கும் நடுவில் ஒரு ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ போன்ற இக்கட்டான நிலையில் புதிய தலைவர் கெவின் வார்ஷ் உள்ளார். அவர் வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை ஏறும், வட்டியைக் குறைக்கவில்லை என்றால் மக்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்படும்.
இந்தச் சர்வதேச அரசியல் சதுரங்க ஆட்டம் வெறும் அமெரிக்காவோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. பணவீக்கம் அதிகரித்தால் அது இந்தியாவிலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்தும். வங்கி லோன் வட்டி முதல், கையில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு வரை அனைத்தும் தற்போது கெவின் வார்ஷ் எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவில்தான் அடங்கியிருக்கிறது.
