தமிழகச் சட்டமன்றத்தின் வரலாற்றையும் மாண்பையும் ஒருங்கே தாங்கி நிற்கும் அந்தப் பிரம்மாண்ட தேக்கு மர நாற்காலி, 104 ஆண்டுகளைக் கடந்து இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. தற்போது புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் அந்த இருக்கையில் அமர்வதன் மூலம், தமிழக ஜனநாயகம் மீண்டும் ஒரு வரலாற்றுத் தருணத்தைச் சந்தித்துள்ளது.
வெறும் ஒரு இருக்கையாக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் அதிகார மையமாகத் திகழும் இந்த நாற்காலியின் பின்னணியில் பலரும் அறியாத வியக்கத்தக்க ரகசியங்கள் ஒளிந்துள்ளன. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ அவையில் சபாநாயகர் அமரும் அதே வடிவமைப்பைப் பின்பற்றி, இந்த இருக்கை மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டது.
இதனை 1922-ஆம் ஆண்டு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு தமிழகச் சட்டமன்றத்திற்குப் பரிசாக வழங்கினார். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வெலிங்டன் பிரபுவின் தாத்தா ஹென்றி பிராண்ட் என்பவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் சபாநாயகராகப் பணியாற்றியவர்.
“இந்த இருக்கையில் அமருபவர்கள் மிகுந்த நிதானத்துடனும், சமயோசிதத்துடனும் சபையை வழிநடத்த வேண்டும்” என்ற உயரிய நோக்கத்தோடு இது வழங்கப்பட்டது. இந்த நாற்காலியில் உள்ள மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், இதில் Secret Chambers என்று சொல்லப்படும் சில ‘ரகசிய அறைகள்’ உள்ளன. இன்றும் ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் இருக்கைக்கு வார்னிஷ் பூசப்படும்போது, அந்த ரகசிய அறைகளும் தூய்மை செய்யப்படுவது ஒரு வழக்கமான மரபாகத் தொடர்கிறது.
தமிழகத்தின் ஒரு ‘நாடோடி நாற்காலி’ என்றும் இதனைச் சொல்லலாம். ஏனென்றால், இது புனித ஜார்ஜ் கோட்டையைத் தாண்டிப் பல இடங்களுக்குப் பயணம் செய்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் ஹால், ஓமந்தூரார் எஸ்டேட்டில் உள்ள ராஜாஜி ஹால், பழைய கலைவாணர் அரங்கம் மற்றும் கோடைக்காலத்தில் உதகமண்டலத்தில் உள்ள ஒரு அரண்மனை எனச் சட்டமன்றக் கூட்டங்கள் எங்கெல்லாம் இடம் மாறியதோ, அங்கெல்லாம் இந்த நூற்றாண்டு கண்ட இருக்கையும் கொண்டு செல்லப்பட்டது.
ஜனநாயகத்தின் மாண்பைப் பறைசாற்றும் இந்த இருக்கையில் சபாநாயகர் இல்லாத நேரங்களில் துணைச் சபாநாயகர் அமரலாம் என்றாலும், மரபுப்படி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகிய இரு அரசியலமைப்புச் சட்ட மேலதிகாரிகளுக்கு மட்டுமே இதில் அமர முழு உரிமை உண்டு. ஒரு மௌன சாட்சியாக நின்று தமிழக அரசியலின் பல அதிரடி மாற்றங்களைக் கண்டுள்ள இந்த வரலாற்றுச் சின்னம், இன்றும் அதன் கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கிறது மெய் சிலிர்க்க வைக்கிறது.
