திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த பூனாம்பாளையத்தைச் சேர்ந்தவர் 41 வயது ரவிசங்கர். பட்டயப் படிப்பு முடித்த இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ரவிசங்கர் தற்போது தமிழக சட்டபேரவையின் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2014ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து பல்வேறு அடிமட்டப் பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது கட்சியின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
துணை சபாநாயகராக தேர்வாகி உள்ள ரவிசங்கர் முதல் முறை எம்எல்ஏ ஆவார். இவர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது தனித்தொகுதியாகும். ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ரவிசங்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, காங்கிரஸ், நாதக வேட்பாளர்களை வீழ்த்தி 66,263 வாக்குகளை பெற்று வென்றார்.
இந்தநிலையில் ரவிசங்கரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. டாஸ்மாக் பார் ஒன்றில் ரவிசங்கர் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படம் தான் அது. துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட செய்தி வெளியானது முதல், சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் ரவிசங்கர் தான் என்பதை எக்ஸ் தளத்தின் AI செயலியான க்ரூக்கும் (Grook) உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

