நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலையில் உள்ளது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, பல முன்னணி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். குறிப்பாக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம் இடையே அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இபிஎஸ் வீட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும், கூட்டணி முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிலும் தனியாக மற்றொரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 37 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அதிமுகவில் மொத்தம் 82 மாவட்ட செயலாளர்களும், 47 எம்எல்ஏக்களும் உள்ள நிலையில், இப்போது யார் யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்துள்ளார். இதற்கிடையே சட்டப்பேரவையில் பங்கேற்க அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
இந்தநிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி MLAவாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். சிவி சண்முகம் அவைக்கு வந்தும் MLAவாக பதவியேற்கவில்லை. சட்டமன்றத்திற்கு வந்துவிட்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு திரும்பி சென்று விட்டார்.
பதவியேற்க அழைப்பு விடுத்த போது அவையில் இல்லாததால் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதவியேற்கவில்லை. இதனால் அவர் என்ன திட்டத்தில் இருக்கிறார்? உண்மையிலேயே அதிமுக இரண்டாக உடைந்ததா? என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. விரைவில் இதுகுறித்து சிவி சண்முகம் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
