சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கிடையே என்டிஏ கூட்டணிக்குச் சென்று அமமுக எம்எல்ஏ காமராஜிடம் ஆதரவு கோரியது தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
குதிரை பேரம் நடந்துள்ளதாக ஆளுநரிடமே நேரடியாகச் சென்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளதால், தவெக ஆட்சியமைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தவெக கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் பாஜக கட்சி தடுக்கிறது என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருக்கிறார்களே? என்ற கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”நேற்று எங்கள் தலைவர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். தவெக விஷயத்தில் எங்களுக்கு எந்த ரோலும் இல்லை.. நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தேவையில்லாமல் எங்களுடைய கட்சியை இழுப்பது சரியில்லை.. நாங்கள் இதில் தலையிடவே இல்லை,” என்று தெரிவித்தார்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ”தமிழக பாஜக கட்சி, தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை.
மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
