தமிழக வெற்றி கழகம் சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களின் பெரும்பான்மையை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கட்சி தலைவர் விஜய் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கோரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளும் ஆதரவு வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, விஜய் நேற்று மாலை ஆளுநரரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
முன்னதாக திமுக கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் பரவினாலும், அந்த கட்சி பின்னர் அதை மறுத்து அதிகாரப்பூர்வமாக ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் சூழல் மேலும் குழப்பமடைந்துள்ளது.
அதே நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதரவு வாய்வழியாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதிகாரப்பூர்வ கடிதம் இன்னும் வழங்கப்படவில்லை. அந்த கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தவெகவுக்கு இன்னும் தேவையான ஒரு இடம் பற்றாக்குறையாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எப்போது அதிகாரப்பூர்வ ஆதரவு அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் “இது திருமாவின் காலம்” என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையில், வன்னி அரசு தெரிவித்த “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” என்ற கருத்தும் அரசியல் விவாதங்களை அதிகரித்துள்ளது.
