159 கப்பல்கள் காலி.. அணு ஆயுதத்திற்கு ‘ஆப்பு’! ஈரானை பணியவைத்ததா அமெரிக்கா?

மேற்கு ஆசியாவில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு அதிரடி அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். ஈரான் உடனான ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தம் என்பது தற்போது “மிகவும் சாத்தியமான ஒன்று” என்று தெரிவித்துள்ள ட்ரம்ப், கடந்த 44 மணிநேரமாக இரு நாடுகளுக்கும் இடையே மிக முக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரான் இந்த ஒப்பந்தத்தை அடைவதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாகவும், ஆனால் அமெரிக்காவின் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான நிபந்தனையாக, ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்பதை ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுதக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் என்பதில் வாஷிங்டன் உறுதியாக உள்ளது. ஈரானின் ராணுவ பலம் கடந்த சில நாட்களில் கணிசமாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், அந்நாட்டின் கடற்படையில் இருந்த 159 போர்க்கப்பல்களும் தற்போது கடலின் அடியில் சிதைந்து கிடப்பதாகவும், அவர்களின் விமானப்படை, ராடார் அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். “அவர்களின் தலைவர்கள் அனைவரும் மறைந்துவிட்டனர், உண்மையில் இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” என்று ட்ரம்ப் தனது பாணியில் அதிரடியாகக் கூறியுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக 14 அம்சங்களைக் கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், உடனடியாகப் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும், அதனைத் தொடர்ந்து அடுத்த 30 நாட்களுக்குள் ஒரு விரிவான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் முக்கியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகை இன்னும் நீடித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஆதிக்கப் போட்டி இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வருமா என்பதே சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரான் ஏற்கனவே பெரும் பொருளாதார மற்றும் ராணுவ இழப்புகளைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள இந்த 44 மணிநேரப் பேச்சுவார்த்தை என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் “ஈரானால் இனி எங்களை எதிர்க்க முடியாது” என்ற கடுமையான தொனியில் பேசினாலும், மறுபுறம் ராஜதந்திர ரீதியாக இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா விரும்புவதையே ட்ரம்ப்பின் இந்த பேச்சு காட்டுகிறது. விரைவில் இந்த 14 அம்ச ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேற்கு ஆசியாவில் அமைதி திரும்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News