விஜய்க்கு கை கொடுத்த ‘காங்கிரஸ்’! ஆனா இவ்வளோ கண்டிஷன்ஸ்?

தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக நிலவி வந்த திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தற்போது தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை எட்ட அக்கட்சிக்குக் காங்கிரஸ் இப்போது கைகொடுக்க முன்வந்துள்ளது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற ஆட்சியை உறுதி செய்யும் வகையில் விஜய்யின் கட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைமை பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இருப்பினும், இந்த ஆதரவு என்பது நிபந்தனைகள் அற்றது அல்ல. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதன் மூலம், மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியோ அல்லது அதன் மறைமுகக் கூட்டாளிகளோ அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் காமராஜரின் ஆட்சி முறையைத் தான் பின்பற்றுவதாக விஜய் தனது பிரச்சாரங்களில் அடிக்கடி குறிப்பிட்டு வந்ததைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைமை, அதனை மதிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. இந்த அதிரடி நகர்வு, கடந்த 22 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்சியமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் பாரதிய ஜனதா கட்சியிடமிருந்தோ அல்லது அந்தச் சித்தாந்தம் கொண்ட சுயேச்சைகளிடமிருந்தோ எந்தவித ஆதரவையும் பெறக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

“மதச்சார்பற்ற கொள்கை” மற்றும் “சமூக நீதி” ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆதரவு வழங்கப்படுவதாகவும், இதனை விஜய் தரப்பு ஒரு லிட்மஸ் சோதனையாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பு ஒரு மதச்சார்பற்ற மாற்றத்திற்கான தீர்ப்பு என்பதால், அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக என்ற ஒரு மாபெரும் சக்தியைத் தவிர்த்துவிட்டு, தமிழகத்தில் புதிதாக உருவெடுத்துள்ள ஒரு அரசியல் சக்தியுடன் காங்கிரஸ் கைகோர்ப்பது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே, திராவிட கட்சிகளின் கோட்டையைத் தகர்த்து விஜய் இப்போது முதல்வர் நாற்காலியை நெருங்கியுள்ளார். விஜய்யின் சமூக நீதிப் பார்வை மற்றும் திராவிட மாடல் குறித்த பேச்சுகள் காங்கிரஸை ஈர்த்துள்ள நிலையில், விரைவில் தமிழகத்தில் விஜய்யின் தலைமையில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இந்த அதிகார மாற்றத்தை ஒட்டுமொத்த இந்தியாவே தற்போது உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News