காங்கிரஸ் ஆதரவு: த.வெ.க. பலம் 113 ஆக உயர்வு… விஜயின் அடுத்த கட்டம் என்ன?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டாததால், கூடுதல் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் கட்சி தீவிரமாக ஈடுபட்டது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் த.வெ.க.வுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அறிவித்தது. அந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் கையெழுத்திட்ட கடிதத்தை விஜய் அவர்களுக்கு வழங்கினர். இதன் மூலம் த.வெ.க.வின் மொத்த பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் பெரும்பான்மையை எட்ட 6 இடங்கள் தேவைப்படுவதால், அதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய், கூடுதல் பொறுப்பு ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை மனுவை அளித்தார். மேலும், த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களையும் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் எந்த நேரத்திலும் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆளுநரிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News