திமுக தோல்வி பின்னணி: ஸ்டாலினை சந்தித்த வைகோ கருத்து….

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 73 இடங்களை மட்டும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது. பெரும்பான்மையை பெற முடியாத சூழலில், கட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வைகோ இன்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஸ்டாலின் முன்வைத்த நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போது ஆட்சிக்கு வரும் புதிய அரசியல் அமைப்புகளுக்கு இருப்பதாகக் கூறினார். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சி இதை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வைகோ மேலும் கூறுகையில், திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மண்ணில் உருவாக பல தலைவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர் என்றும், 1962 தேர்தலை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். அப்போது 50 இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா தோல்வியடைந்ததால் வெற்றியை கொண்டாடவில்லை என்ற வரலாற்றை அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதை அவர் 1962 தேர்தல் மனநிலையுடன் ஒப்பிட்டார்.

மேலும், மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிப்பதாக கூறிய வைகோ, திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என்றும், தற்போதைய சூழலிலும் கூட்டணி உறுதியாக நீடிக்கும் என்றும் தெரிவித்தார். தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் உருவாகும் நிலையில் இந்த கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.

Related News

Latest News