தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொங்கு சட்டசபை அமையலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 4ம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆரம்பம் முதலே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்கிற நிலையில் தவெக 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதேபோல அதிமுக 64 இடங்களிலும், திமுக 44 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகளை பொறுத்தவரை காங்கிரஸ் 5 இடங்களிலும், தேமுதிக 2 இடங்களிலும், பாமக 4 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இது போன்ற சூழல் தமிழ்நாட்டில் புதிதல்ல. கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காமல், கருணாநிதி தலைமையில் திமுக, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அப்போது ஆட்சியில் பங்கு தரப்படவில்லை. இந்நிலையில், அதேபோல இந்த முறையும் எந்த கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் தவெக, அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்குமா? விஜய் ஏற்கனவே சொன்னது போல ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
