தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தற்போதைய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அசைக்க முடியாத கோட்டையாக கருதப்பட்ட பல தொகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக பெரும் பின்னடைவை சந்தித்து வருவது அரசியல் நோக்கர்களை மட்டுமல்லாமல், அந்த கட்சியின் தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களிலும், அதிமுக கூட்டணி எண்பதிற்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை பெற்று வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வெறும் 50 இடங்களுக்குள் சுருங்கிப் போனதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணங்களைத்தான் இந்த தொகுப்பில் நாம் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
முதலாவதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் என நான்கு முக்கிய தொகுதிகளிலும் திமுக தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுதான்.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பட்டப்பகலில் நடக்கும் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே, குறிப்பாக பெண் வாக்காளர்களிடையே ஒருவித அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய ஆட்சிக்கு, வாக்குகள் மூலம் மக்கள் தங்களின் எதிர்ப்பை மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மதுரை மத்திய தொகுதியை எடுத்துக்கொண்டால், நிதியமைச்சராகவும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் வலம் வந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பின்னடைவைச் சந்திப்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் கள நிலவரப்படி, ஒரு சாதாரண வாக்காளர் அமைச்சரைச் சந்திப்பதோ அல்லது தங்கள் பகுதி குறைகளை மனுவாகக் கொடுப்பதோ கூட முடியாத ஒரு இரும்புத் திரை போன்ற சூழல் அங்கு நிலவியது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் மேலோட்டமான அரசியலில் கவனம் செலுத்தியது அவருக்குப் பலத்த அடியைக் கொடுத்துள்ளது.
இதே நிலைதான் சேலம் வடக்கிலும் நீடிக்கிறது. அமைச்சர் ராஜேந்திரன் தலைமையிலான திமுகவில் நிலவிய கடுமையான கோஷ்டிப் பூசல், அவரைத் தோல்வியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. குறிப்பாக கன்னங்குறிச்சி பகுதியில் செல்வாக்கு மிக்க குபேந்திரன் போன்றவர்கள் திமுகவிற்கு எதிராகத் திரும்பியதும், செவ்வாய்ப்பேட்டை கவுன்சிலர் ஜெயக்குமார் போன்றவர்களை அமைச்சர் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தியதும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டர்களையும் நிர்வாகிகளையும் மதிக்காத அமைச்சரின் போக்கு, சொந்த கட்சியினரையே அவருக்கு எதிராக வேலை செய்யத் தூண்டியுள்ளது. திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றொரு அதிர்ச்சி. கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களை மதிக்காமல் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தது, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத குப்பைக்கிடங்கு பிரச்சனை மற்றும் ஏரி தூர்வாரும் பணிகளில் காட்டிய மெத்தனப் போக்கு போன்றவை அமைச்சருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
வேலூர் மற்றும் காட்பாடி தொகுதிகளிலும் இதே நிலைதான். 15 ஆண்டுகளாகத் திறக்கப்படாத எம்.எல்.ஏ அலுவலகம், பொதுமக்களைச் சந்திக்காத அமைச்சர் துரைமுருகன் என மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி அலை, பல ஆண்டுகால கோட்டையைச் சரித்துள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி மிக முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக கே.வி. குப்பம் போன்ற தொகுதிகளில் திமுகவை முந்திக்கொண்டு தவெக முன்னிலை பெறுவது, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகள் மொத்தமாக திசை மாறியதைக் காட்டுகிறது.
குடியாத்தத்தில் திமுக சின்னம் இல்லாதது மற்றும் வேட்பாளர் புதிய முகமாக இருந்தது அதிமுகவிற்குச் சாதகமாக முடிந்துள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, ‘ஓசூர் சென்டிமென்ட்’ மீண்டும் ஒருமுறை திமுகவை மிரள வைத்துள்ளது. தமிழக வரலாற்றில் ஓசூரில் பிரச்சாரம் செய்யும் ஆளுங்கட்சித் தலைவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை என்ற சென்டிமென்ட்டை உடைக்க நினைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பிரச்சாரம் செய்ததும் தற்போது திமுகவின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் அரசு ஊழியர்களின் அதிருப்தி என அடுக்கடுக்கான காரணங்கள் திமுகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியுள்ளன. மொத்தத்தில், மக்கள் மாற்றத்தை விரும்பி தங்களது தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியுள்ளனர் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
