திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய் குறித்து ஆரம்பத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அவரை முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் உடன் ஒப்பிட்டு, தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை உருவாக்குவார் என்று சிலர் கூறினர். ஆனால் விஜய் மீது திமுக மற்றும் அதிமுக தரப்பில் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. “திரைத்துறையிலிருந்து வருபவர் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது” என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது நிலைமையே மாறியுள்ளது. மக்கள் தீர்ப்பே முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய்க்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வயதான பாட்டி ஒருவர் “விசிலுக்கு வாக்களித்தேன்” என்று கூறிய வீடியோ வைரலானது. இது விஜய்க்கு கிடைத்த மக்கள்மட்ட ஆதரவை வெளிப்படுத்துகிறது.
விஜயின் பேச்சுத்திறன் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும் மக்கள் பொருட்படுத்தவில்லை. அவர் மனப்பாடம் செய்து பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், தேர்தலில் அவர் ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரு கட்சிகளுக்குள் மாறி மாறி ஆட்சி வந்த நிலையில், மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்த்திருந்தனர். அந்த மாற்றத்தின் அடையாளமாக விஜய் பார்க்கப்பட்டுள்ளார்.
பல தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் என்பதையும் அறியாமல், விஜயின் முகத்திற்கும் சின்னத்திற்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, தமிழக அரசியலின் புதிய பிராண்டாக உருவெடுத்துள்ளார். இனி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி, மாநில முன்னேற்றத்திற்கு அவர் செயல்படுவாரா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
