ஈரான் தலைவர் வெளியிட்ட அதிரடி ‘அறிக்கை’! ஒரே ஒரு ‘tweet’-ஆல் பதறும் அமெரிக்கா!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவரது மகன் மொஜ்தபா கமேனி, தற்போது முதல்முறையாக உலக நாடுகளுக்கு ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றது முதல் மொஜ்தபா பொதுவெளியில் தோன்றாத நிலையில், ஈரானிய தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறிவந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஈரானின் அசைக்க முடியாத ஒற்றுமை குறித்து அவர் பதிவிட்டுள்ளார். எதிரிகளின் சதித் திட்டங்களால் ஈரானின் ஒற்றுமையைத் தகர்க்க முடியாது என்றும், தங்களுக்குள் இருக்கும் இரும்பு போன்ற பிணைப்பு எதிரிகளை மேலும் பலவீனப்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, அலி கமேனி கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் பலத்த காயமடைந்துள்ளார். அவரது முகம் மற்றும் உதடுகள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவருக்குப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அவரது கைகள் மற்றும் கால்களில் மூன்று முறைக்கும் மேலாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உடல் ரீதியாகப் பலவீனமாக இருந்தாலும், அரசியல் ரீதியாகத் தனது பிடியைத் தளர்த்தாத மொஜ்தபா, மக்களின் மனநிலையைச் சிதைக்க நடக்கும் ஊடகப் போர் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி தனது நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரானிய அரசியலில் மிதவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என்ற பாகுபாடு கிடையாது என்றும், அனைவரும் ஈரானியப் புரட்சியாளர்களே என்றும் அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ட்ரம்ப்பின் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ஒரே கடவுள், ஒரே தேசம், ஒரே தலைவர் என்ற பாதையில் ஈரான் வெற்றி நடை போடும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

ஆனால், மற்றொரு பக்கம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியில் தென்படும் ஈரானிய சிறிய படகுகளைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளதோடு, இந்தியப் பெருங்கடலில் ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றையும் அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News