தேர்தல் முடிவுகளுக்கு பின் நடிகர் விஜய்யுடன் கூட்டணி? பாஜக தேசிய தலைவர் பற்றவைத்த பரபரப்பு!

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜயால் உடனடியாக பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.


நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகமான தவெக தனது முதல் தேர்தலை சந்தித்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜயுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று நிதின் நபின் தெளிவாக மறுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயுடன் இணையும் தேவையே எங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.


மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியான NDA தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். விஜய் அரசியலில் புதிதாக களம் இறங்கியவர் என்பதால், அவரால் உடனடியாக பெரிய மாற்றத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்றும், அரசியலில் புதியவர்களுக்கு தாக்கம் செலுத்த சில காலம் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


தமிழகத்தில் எங்களது கூட்டணி வலிமையானது, முழுமையானது; எனவே வேறு எந்த கட்சியின் ஆதரவும் தேவையில்லை என்று அவர் கூறியிருக்கிறார். தற்போதைய கூட்டணிக் கட்டமைப்பே எங்களது பலமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டணி நிலையானதுடன், தேர்தல் களத்தில் கடும் போட்டியை உருவாக்கக்கூடியதாக இருக்கும் என்றும் நிதின் நபின் கூறினார். ஆகவே, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

Latest News