வாக்குப்பதிவை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்… தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் கடிதம்!!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பிற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் ஏற்க முடியாதவை என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வாக்களிக்க வந்த மக்களுக்குக் கூட போதிய போக்குவரத்து வசதி இல்லாதது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், மாநில போக்குவரத்து கழகம் திட்டமிட்ட முறையில் செயல்படவில்லை என்றும், இது நிர்வாக குறைபாடாகும் என்றும் விமர்சித்துள்ளார். வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது என்பது மிகக் கவலைக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ள வாக்குப்பதிவை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தாமதம் காரணமாக பலர் வாக்களிக்க முடியாமல் போகும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் மக்களின் அடிப்படை உரிமையும், தேர்தல் முறைகளின் மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படும் என விஜய் எச்சரித்துள்ளார்.

Related News

Latest News