மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுமா என்ற கேள்விக்கு மத்தியில், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகமான சென்ட்காம் (CENTCOM) வெளியிட்டுள்ள ஒரு புதிய வீடியோ ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்கா தனது ராணுவ பலத்தைப் பறைசாற்றும் வகையில் இந்த அதிரடி வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போன்ற பிரம்மாண்ட போர்க்கப்பல்களில் இருந்து சீறிப்பாயும் போர் விமானங்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்களை மறுசீரமைக்கும் காட்சிகளுடன், “நாங்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தித் தயாராக இருக்கிறோம்” என்ற நேரடி எச்சரிக்கையை ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ளது.
இந்த வீடியோவின் மிக முக்கியமான செய்தியே, “நாங்கள் போருக்கான புதிய வியூகங்களை வகுத்து வருகிறோம்” என்பதுதான். “உலகில் எந்த ஒரு ராணுவமும் செய்யாத வகையில், இந்த போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி நாங்கள் எங்களது நுட்பங்களையும், ஆயுதங்களையும் நவீனப்படுத்தி வருகிறோம்” என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இந்த வீடியோவில் முழங்கியுள்ளனர்.
இது வெறும் காட்சிப்பதிவு மட்டுமல்ல, ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா கச்சிதமாகத் தயாராகி வருவதையே இது உறுதிப்படுத்துகிறது. நடுக்கடலில் நிலைகொண்டுள்ள யுஎஸ்எஸ் ஸ்ப்ரூவன்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் திரிப்போலி போன்ற போர்க்கப்பல்கள் ஈரானியத் துறைமுகங்களைச் சுற்றி வளைத்துத் தங்களின் முற்றுகையைத் தொடர்ந்து வருகின்றன.
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், நடுக்கடலில் அமெரிக்காவின் பிடி ஒரு அங்குலம் கூடத் தளரவில்லை. வர்த்தகக் கப்பல்களை வழிமறித்துத் திருப்பி அனுப்பும் பணிகளில் அமெரிக்க மரைன் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு மிகப்பெரிய இழுபறி நீடிக்கிறது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், “அமெரிக்கா தனது கடல்வழி முற்றுகையை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம்” என்று ஈரான் பிடிவாதமாகக் கூறி வருகிறது. 20,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் இஸ்லாமாபாத்தைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன என்பது ஒரு புதிராகவே நீடிக்கிறது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த “ரீ-ஆர்ம்டு” (Rearmed) வீடியோ, ஈரானைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளதோடு, பேச்சுவார்த்தை மேசையில் அமெரிக்காவிற்கு ஒரு வலுவான நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. போர்நிறுத்தம் என்பது ஒரு தற்காலிக இடைவெளி மட்டுமே என்றும், எப்போது வேண்டுமானாலும் குண்டுகள் வெடிக்கலாம் என்றும் ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் இந்த அதிநவீன போர்க்கப்பல்களும், ஸ்டெல்த் விமானங்களும் மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றப்போகின்றனவா? அல்லது அமைதி ஒப்பந்தம் கைக்கூடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
