50% ஆயுதங்கள் காலி? ஈரானை அழிக்கப்போய் அடி வாங்கிய அமெரிக்கா!

அமெரிக்க ராணுவம் தனது வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய ஆயுதப் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஏழு வாரங்களாகத் தொடர்ந்து வரும் இந்த ஈரான் போரினால் அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ (Patriot) மற்றும் ‘தாட்’ (THAAD) போன்ற அதிநவீன ஏவுகணைகளில் சுமார் 50 சதவீதம் தீர்ந்துவிட்டதாக வாஷிங்டனைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.எஸ் (CSIS) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, எதிரி நாட்டு ஏவுகணைகளைத் தடுத்து அழிக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள் பாதியாகக் குறைந்துவிட்டதும், தாட் ஏவுகணைகள் 50 சதவீதத்திற்கும் மேல் பயன்படுத்தப்பட்டதும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையை நிலைகுலையச் செய்துள்ளது. ஒருவேளை இப்போது சீனா போன்ற ஒரு வல்லரசு நாட்டுடன் அமெரிக்கா மோத நேரிட்டால், அதைச் சமாளிக்கத் தேவையான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இல்லை என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் கசப்பான உண்மை.

இந்த ஆயுதக் கிடங்குகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரக் குறைந்தது நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் பிரசிஷன் ஸ்டிரைக் (PrSM), டோமாஹாக் (Tomahawk) மற்றும் ஜாசம் (JASSM) போன்ற முக்கிய ஏவுகணைகளும் இந்தச் ஏழு வாரப் போரில் பெருமளவு செலவாகியுள்ளன. இந்தப் பின்னணியில் தான், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான போர்நிறுத்தத்தைத் தற்போது அதிரடியாக நீட்டித்துள்ளார். “ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானின் மீது குண்டுமழை பொழியும்” என்று மிரட்டி வந்த ட்ரம்ப், இப்போது 180 டிகிரி பல்டி அடித்து, அமைதிக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஈரானியத் தலைமைக்குள் நிலவும் கடும் பிளவுகள் மற்றும் குழப்பங்களே பேச்சுவார்த்தை தாமதத்திற்குக் காரணம் என்று ட்ரம்ப் கூறினாலும், அமெரிக்காவின் ஆயுதத் தட்டுப்பாடும் இந்த முடிவிற்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடல்வழி முற்றுகை இன்னும் நீடிக்கிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் பாகிஸ்தான் பயணம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் “அளவுக்கு அதிகமான நிபந்தனைகளுக்கு” அடிபணிய முடியாது என்றும், தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் ஈரான் பிடிவாதமாக அறிவித்துள்ளது.

நடுக்கடலில் அமெரிக்காவின் முற்றுகை ஒருபுறம், ஈரானின் மிரட்டல்கள் மறுபுறம் என மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு எரிமலையின் விளிம்பில் நிற்கிறது. போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாக முடக்கி வைத்திருக்கும் அமெரிக்கக் கடற்படை, எந்த நிமிடத்திலும் தாக்குதலைத் தொடங்கத் தயாராக இருக்குமாறு ட்ரம்ப்பால் உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானின் பிடிவாதமும், அமெரிக்காவின் ஆயுதத் தட்டுப்பாடும் இந்தப் போரின் போக்கை எங்கு கொண்டு செல்லும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Related News

Latest News