உதவி செய்த இந்தியாவுக்கு ‘முதுகில் குத்து’! ஈரானின் அத்துமீறலால் டென்ஷன் ஆன டெல்லி!

ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) இந்தியக் கொடி ஏந்திய வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படையினர் (IRGC) திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி செய்தவர்களுக்கு உபத்திரம் செய்வது போல, இந்தியா செய்த நன்மைகளை மறந்து ஈரான் இப்படி ஒரு துரோகச் செயலில் ஈடுபட்டிருப்பது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஈரானியத் தூதரை இந்திய அரசு உடனடியாக நேரில் அழைத்துத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவுச் செயலாளர், ஈரானியத் தூதரிடம் இந்தியாவின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், சர்வதேச நீர்ப்பரப்பில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் மிக முக்கியமான முன்னுரிமை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில் ஈரான் போரினாலும், பொருளாதாரத் தடைகளாலும் பாதிக்கப்பட்டபோது, இந்தியா தனது நட்புக் கரத்தை நீட்டி பல்வேறு மனிதாபிமான உதவிகளைச் செய்தது உலகறிந்த விஷயம். ஆனால் இப்போது, இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் கப்பல்களைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் நடத்துவது, “முதுகில் குத்துவதற்குச் சமம்” என்று டெல்லி வட்டாரத்தில் ஆவேசம் எழுந்துள்ளது.

இந்தப் பதற்றத்திற்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ஒரு மிகப்பெரிய ராஜதந்திரப் போர் ஒளிந்துள்ளது. அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தற்போது முற்றுகையிட்டுள்ளன. இதற்குப் பதிலடியாக, உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இந்த இரண்டு நாடுகளின் மோதலுக்கு இடையே, எவ்விதத் தொடர்பும் இல்லாத இந்தியக் கப்பல்கள் இலக்கு வைக்கப்படுவதுதான் இந்தியாவின் கோபத்திற்கு முக்கியக் காரணமாகும்.

ஈரானியத் தூதர் இந்தியாவின் கருத்துக்களைத் தனது நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுக்குத் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும், மீண்டும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. பெட்ரோல், டீசல் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரத்தில், ஈரான் தனது போக்கை மாற்றிக் கொள்ளுமா அல்லது இந்தியாவின் கடும் எதிர்ப்பைச் சந்திக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News