அமெரிக்காவின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன போர் விமானங்களுக்கு இப்போது ஒரு சாதாரண ஆயுதத்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஈரானியப் படைகள் அமெரிக்காவின் F-15 மற்றும் A-10 ரக விமானங்களைச் சுட்டு வீழ்த்தியிருப்பதுடன், உலகின் மிகச்சிறந்த ஸ்டெல்த் விமானமாகக் கருதப்படும் ‘F-35’ விமானத்தையும் சேதப்படுத்தியுள்ளன.
“ஈரானிடம் முறையான ரேடார் வசதிகளோ, விமான எதிர்ப்பு ஏவுகணைகளோ இல்லை, அமெரிக்க விமானங்கள் அவர்களின் தலைக்கு மேலே சுதந்திரமாகப் பறக்கின்றன” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் அமெரிக்க ராணுவ வட்டாரத்தையே அதிர வைத்துள்ளன.
இந்த ஒட்டுமொத்தப் போரின் போக்கையே மாற்றப்போவது ‘MANPADS’ எனப்படும் தோளில் வைத்து ஏவப்படும் ஏவுகணைகள் தான். இதைக் கையாளுவது மிக எளிது; ஒரு தனி வீரர் இதைத் தனது தோளில் சுமந்து சென்று எதிரி நாட்டு விமானங்களைத் துல்லியமாகத் தாக்க முடியும். இவை ரேடார் சிக்னல்களை வெளியிடுவதில்லை என்பதால், அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்களால் கூட இதை முன்கூட்டியே கண்டறிய முடிவதில்லை. சீனாவிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட இத்தகைய ஏவுகணைகள் ரகசியமாக ஈரானுக்கு அனுப்பப்படுவதாக அமெரிக்க உளவுத்துறையான சிஎன்என் (CNN) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகள் வழியாக இந்த ஆயுதங்கள் ஈரானைச் சென்றடைவதாகக் கூறப்படுகிறது.
சீனா இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்தாலும், கள நிலவரம் வேறு கதையைச் சொல்கிறது. ஈரானியப் படைகள் சீனாவின் உளவு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி அமெரிக்கத் தளங்களைத் துல்லியமாகக் குறிவைப்பதாகப் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. டிரம்பின் நேரடி எச்சரிக்கையையும் மீறி, சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் ஈரான் தனது வான் பாதுகாப்புத் திறனைப் பலமடங்கு உயர்த்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா தரைவழிப் போரைத் தொடங்கினால், தரைப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தாழ்வாகப் பறக்கும் அமெரிக்க விமானங்களுக்கு இந்த ‘MANPADS’ ஏவுகணைகள் ஒரு மிகப்பெரிய சவாலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த மறைமுக மோதல், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தைத் தாண்டி ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பப் போராகவும் உருவெடுத்துள்ளது. ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் ஒளிந்து கொண்டு, இந்தச் சிறிய ஏவுகணைகள் மூலம் பல கோடி மதிப்புள்ள அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்துவது ஈரானுக்குச் சாத்தியமாகியுள்ளது. இதனால் அமெரிக்காவின் வான்வழி மேலாதிக்கம் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. சீனா மீதான 50 சதவீத வரி விதிப்பு மிரட்டல் ஒருபுறம் இருந்தாலும், சீனாவின் இந்த மறைமுக ஆயுத விநியோகம் டிரம்பின் போர் திட்டங்களுக்கு ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமையப்போகிறது என்பது மட்டும் உறுதி.
