“ஹார்முஸ் நீரிணையை நான் நிரந்தரமாகத் திறக்கிறேன். அதற்காக, சீன அதிபர் எனக்கு ஒரு பெரிய அணைப்பைக் கொடுப்பார்” – இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு. ஆனால், கடலில் நடப்பதோ முற்றிலும் வேறு. ஒருபுறம் போர் மேகங்கள் சூழ்ந்திருக்க, ட்ரம்ப் மட்டும் சீனா, சமாதானம், அணைப்பு எனப் பேசுவதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?
ஈரான் போருக்கு நடுவே, அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்ட இந்த பதிவு, உலக அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவுக்காகவே இதைச் செய்வதாகவும், அவர்கள் ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்ப மாட்டார்கள் என ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், கள யதார்த்தம் முற்றிலும் தலைகீழாக உள்ளது.
ட்ரம்ப் ‘திறந்துவிட்டதாக’க் கூறும் அதே ஹார்முஸ் நீரிணையை, அமெரிக்கக் கடற்படைதான் தற்போது முற்றுகையிட்டு மூடியுள்ளது. ஈரானியக் கப்பல்கள் எதையும் அனுமதிக்காமல், ஒரு கடுமையான பொருளாதாரத் தடையை அமெரிக்கா அமல்படுத்தி வருகிறது.
மறுபுறம், ஈரான் ராணுவமோ, அமெரிக்கக் கப்பல்களை மூழ்கடிப்போம் என எச்சரித்து வருகிறது. இதனால், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவே இல்லை.
அப்படியானால், ட்ரம்ப் ஏன் இப்படி ஒரு பதிவை வெளியிட்டார்? ஈரானின் முக்கிய நட்பு நாடான சீனாவே தங்களுக்கு ஆதரவாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, ஈரானை ராஜதந்திர ரீதியாகத் தனிமைப்படுத்த ட்ரம்ப் முயற்சிக்கிறாரா? அல்லது உலக சந்தைகளை அமைதிப்படுத்த, ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்குகிறாரா? என்ற கேள்விகள் உருவாகின்றன.
இது மட்டுமில்லாமல் இஸ்ரேலின் போர் முழக்கம், ஈரானின் மிரட்டல், அமெரிக்காவின் முற்றுகை என போர்க்களத்தில் பதற்றம் நீடிக்கும் போது, அதிபர் ட்ரம்ப் மட்டும் இப்படிப் பேசுவதன் மர்மம் விலகவில்லை என விர்சனங்கள் எழுந்து வருகிறது.
