அதிமுக ஆட்சிக் காலத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர் என்.ஜி. பார்த்திபன். அவர் அமமுக கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், சோளிங்கர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்தார்.
அமமுக சார்பில் சோளிங்கர் தொகுதியில் போட்டியிட என்.ஜி. பார்த்திபனை டிடிவி தினகரன் முன்னதாகவே அறிவித்திருந்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையும்முன்பே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தையில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது, சோளிங்கர் தொகுதி அதில் இடம்பெறவில்லை. அந்த தொகுதி பாமகவுக்கு வழங்கப்பட்டது. இதனால் என்.ஜி. பார்த்திபன் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், அமமுக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் சேர்ந்து 80-க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர்.
