உலகம் முழுவதும் அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்தப் பரபரப்புக்கு மத்தியில் ரஷ்யா உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1000 ட்ரோன்களை ஏவி உக்ரைனை நிலைகுலையச் செய்துள்ளது ரஷ்ய ராணுவம். பகல் நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்கள் குறிவைக்கப்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
உக்ரைன் விமானப்படை வெளியிட்ட தகவலின்படி, ஏவப்பட்ட 1000 ட்ரோன்களில் 500க்கும் மேற்பட்டவை மிகத் துல்லியமாகப் பல இடங்களைக் குறிவைத்தன. உக்ரைன் ராணுவம் உயிரைக் கொடுத்துப் போராடி 541 ட்ரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தியதாகக் கூறினாலும், மீதமுள்ள ட்ரோன்கள் ஏற்படுத்திய சேதம் மிக அதிகம். இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும், இதில் ஐந்து குழந்தைகளும் அடங்குவர் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த ட்ரோன் தாக்குதல்கள் ராணுவத் தளங்களை மட்டுமல்லாமல், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக ல்விவ் (Lviv) நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இவானோ-ஃபிராங்க்ஸ் (Ivano-Frankivsk) பகுதியில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையும் சேதமடைந்துள்ளது. இது போர்க்கள விதிமுறைகளை மீறிய செயல் என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரானின் பங்களிப்பு இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா பயன்படுத்தியவை ஈரானின் நவீனப்படுத்தப்பட்ட “ஷாஹேத்” (Shahed) வகை ட்ரோன்கள் என்றும், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துவது புதினின் வக்கிரமான மனநிலையைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா இப்போதைக்கு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணத்தில் இல்லை என்பதையே இந்த 1000 ட்ரோன் தாக்குதல் காட்டுகிறது என சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.
