இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளுக்காக இந்திய ரயில்வே புதிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் டிக்கெட் ரத்து விதிமுறைகள் மற்றும் போர்டிங் பாயிண்ட் (ஏறும் நிலையம்) தொடர்பான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் மூலம் பயணிகள் அதிகபட்ச ரீஃபண்ட் பெறவும், கூடுதல் வசதிகள் கிடைக்கவும் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
புதிய விதிகளின்படி, ரயில் புறப்படும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால், குறைந்த அளவு அபராதம் மட்டும் பிடித்தம் செய்து, மீதமுள்ள தொகை முழுமையாக ரீஃபண்ட் செய்யப்படும்.
72 மணி நேரத்திற்குள் இருந்து 24 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், மொத்த கட்டணத்தில் 25% அபராதம் பிடித்தம் செய்யப்படும். 24 மணி நேரத்திற்குள் இருந்து 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், 50% தொகை அபராதமாக பிடிக்கப்படும். ஆனால் ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால் எந்த ரீஃபண்டும் கிடைக்காது.
மேலும், பயணிகள் தங்களுடைய போர்டிங் பாயிண்ட்டை மாற்றிக் கொள்ளும் வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இப்போது ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்புவரை, அவர்கள் ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக, எழும்பூரில் ஏற முடியாவிட்டால் தாம்பரம் அல்லது கிண்டி பதிலாக செங்கல்பட்டு போன்ற நிலையங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
முன்னதாக, போர்டிங் பாயிண்ட் மாற்றம் என்பது சார்ட் தயாரிக்கப்படும் முன்புவரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. தற்போது இது மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணம், சில தரகர்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெருமளவில் பதிவு செய்து, பின்னர் ரத்து செய்து அதிக ரீஃபண்ட் பெறும் பழக்கத்தை கட்டுப்படுத்துவதாகும். இதனால் சாதாரண பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்ய இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
முன்பு 48 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் ரத்து செய்தால் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகை (சுமார் ₹180 மற்றும் ஜிஎஸ்டி, வகுப்பைப் பொறுத்து மாறும்) பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அது 72 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், முன்பு 4 மணி நேரத்திற்கு முன்புவரை 50% ரீஃபண்ட் கிடைத்த நிலையில், தற்போது அது 8 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.
