ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொடும் என்று பிரபல பொருளாதார நிபுணர் எட்வர்ட் யார்டெனி (Ed Yardeni) அதிர்ச்சிகரமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தற்போது தங்கம் விலை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அது ஒரு அவுன்ஸ்க்கு 6,000 டாலர் வரையும், இந்தத் தசாப்தத்தின் முடிவில் $10,000 டாலர் வரையும் உயரும் என்று அவர் கணித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சங்களைத் தாண்டும் சாத்தியம் உள்ளது. தங்கம் என்பது வெறும் பாதுகாப்பான முதலீடு மட்டுமல்ல, அது வரப்போகும் மிகப்பெரிய விலைவாசி உயர்வை முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு எச்சரிக்கை மணி என்று அவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இது மட்டுமல்லாமல், அலுமினியம் மற்றும் உரம் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மாதங்களில் விவசாயத்திற்குத் தேவையான உரங்களின் விலை தாறுமாறாக உயரும் அபாயம் உள்ளது.
அதிக விலைக்கு உரங்களை வாங்கி விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், விவசாயிகளின் உற்பத்தி குறையும். விளைச்சல் குறைந்தால், உணவுப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் என்று யார்டெனி எச்சரித்துள்ளார். இது உலக அளவில் பெரும் உணவுப் பஞ்சத்தைக்கூட ஏற்படுத்தலாம்.
தங்கம் விலை உயர்வது என்பது மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு முன்னோட்டம் மட்டுமே. கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் தட்டுப்பாடு நீடித்தால், கோடை காலத்திலும், குளிர்காலத்திலும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதைச் சமாளிக்க அமெரிக்க அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
குறிப்பாக, எஃகு, தாமிரம் மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்க அதிபர் குறைக்க வாய்ப்புள்ளது. வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, விலைவாசியைக் குறைக்க வேண்டிய நெருக்கடியில் அரசு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் இதர மூலப்பொருட்களில் கவனமாக முதலீடு செய்ய வேண்டிய நேரம் இது. போர் முடியும் வரை இந்த விலைவாசி உயர்வு தொடரும் என்பதால், சாமானிய மக்கள் தங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் பரவவிருக்கும் இந்தப் பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.
