இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வங்கி சேவைகள் வழங்குகின்றன. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்களைத் தவிர, அனைத்து வகை வங்கிக் கணக்குகளிலும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ஒரு பேலன்ஸ் (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்க வேண்டும். இதை பராமரிக்காதால், வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன.
நீண்ட காலமாக, மினிமம் பேலன்ஸ் அபராதங்கள் நியாயமற்றவை என்ற கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சமீபத்திய தகவல்களின் படி, கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகள் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத காரணத்தால் வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் ₹19,000 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளன.
நாடாளுமன்றத்தில் இதனை எழுப்பிய ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா கூறியதாவது, இந்த அபராத வசூல் பெரும்பாலும் பணக்காரர்கள் அல்லது கடனாளர்களிடமிருந்து எடுக்கப்படவில்லை. இந்தியாவின் ஏழை மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு விவசாயியிடம் மினிமம் பேலன்ஸ் இல்லையெனச் சொன்று அபராதம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. ஓய்வூதியதாரர் மருத்துவ தேவைக்கு பணம் எடுத்ததால் பேலன்ஸ் குறைந்த நிலையில் அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அன்றாட வருமானத்தில் குடும்பம் நடத்தும் ஒருவர் வங்கிக் கணக்கில் சில நூறு ரூபாய்களை பயன்படுத்தியதற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறைந்தபணம் வைத்திருக்கும் ஏழை மக்களிடமிருந்து அபராதம் வசூல் செய்வது நியாயமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே மினிமம் பேலன்ஸ் இல்லாததால் விதிக்கப்படும் அபராத முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் பேசியுள்ளார்.
இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
