வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இந்த ஆவணங்கள் காண்பித்து வாக்களிக்கலாம்

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (EPIC) காட்ட முடியாதவர்கள், இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதை வழங்க முடியாதவர்கள், கீழ்க்கண்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்:

  • ஆதார் அட்டை
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் பணி அடையாள அட்டை
  • புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகம்
  • தொழிலாளர் நல அமைச்சக திட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை
  • ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • PAN அட்டை
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை
  • இந்திய கடவுச்சீட்டு
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
  • அரசு / பொதுத்துறை ஊழியர்களுக்கான பணி அடையாள அட்டை
  • எம்.பி / எம்.எல்.ஏ / எம்.எல்.சி அடையாள அட்டை
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கும் இயலாமை அடையாள அட்டை

வாக்காளர் தகவல் சீட்டு:

வாக்காளர் பட்டியலில் தங்களது வரிசை எண்ணை தெரிந்து கொள்ள, புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக “வாக்காளர் தகவல் சீட்டு” வழங்கப்படும். இதில் வாக்குச்சாவடி பெயர், தேதி, நேரம் போன்ற விவரங்கள் இடம்பெறும். இந்த சீட்டு, வாக்களிக்கும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும், வேறு தொகுதியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தாலும், அந்த வாக்காளரின் பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.

அதாவது, எந்த அடையாள அட்டையும் இருந்தாலே வாக்களிக்க முடியாது; வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI):

1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 20Aன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் அசல் இந்திய கடவுச்சீட்டை மட்டுமே அடையாளமாகக் காட்டி வாக்களிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News