கேஸ் சிலிண்டர் வேணுமா? உடனே இதை செய்யுங்க! இல்ல ‘கட்’ ஆகிடும்!

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் கோடிக்கணக்கான வீட்டு உபயோக வாடிக்கையாளர்களுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas) ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, எல்பிஜி (LPG) சிலிண்டர் வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை, அதாவது இ-கேஒய்சி (e-KYC) முறையை முடிப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானியம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்தச் சரிபார்ப்பைச் செய்ய கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே இதனை மிக எளிதாகச் செய்துவிடலாம்.

இதற்காக நீங்கள் முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ‘ஆதார் பேஸ் ஆர்.டி’ (Aadhaar FaceRD) என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பின்னர், நீங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான ‘இந்தியன் ஆயில் ஒன்’ (Indane), ‘பாரத் கேஸ்’ (Bharat Gas) அல்லது ‘எச்பி பே’ (HP Pay) ஆகியவற்றில் உங்களது நிறுவனத்திற்குரிய செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

செயலியைத் திறந்து உங்களது லாகின் விவரங்களைக் கொடுத்து உள்ளே சென்றதும், உங்களது 16 இலக்க எல்பிஜி ஐடியை (16-digit LPG ID) உள்ளிட வேண்டும். பின்னர் ‘மை ப்ரொஃபைல்’ (My Profile) பகுதிக்குச் சென்று, ‘ரீ-இ-கேஒய்சி’ (Re-eKYC) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கு கேட்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, ஃபேஸ் ஸ்கேன் (Face Scan) பட்டனை அழுத்தினால் உங்கள் போன் கேமரா ஆன் ஆகும். அதன் மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பை வெற்றிகரமாக முடித்துவிடலாம்.

குறிப்பாக, உஜ்வாலா திட்டத்தின் (Ujjwala Yojna) கீழ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு இந்த இ-கேஒய்சி மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு நிதியாண்டிலும் இதனை முடித்தால் மட்டுமே, 8 மற்றும் 9-வது ரீஃபில்களுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் மானியம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும்.

ஒருவேளை நீங்கள் இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றால், 7-வது சிலிண்டர் வரை மட்டுமே மானியம் கிடைக்கும், அதன் பிறகு மானியம் நிறுத்தப்படும். இருப்பினும், இதனால் உங்களது சிலிண்டர் விநியோகம் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படாது.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 1800 2333 555 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க, இப்போதே இந்த எளிய ஆன்லைன் முறையைப் பின்பற்றி உங்களது இ-கேஒய்சியைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

Related News

Latest News