சாப்பிட்ட பிறகு, குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிட்ட பின்னர் வயிறு உப்புசம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படுகின்றன. இதிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் குளிர்பானங்கள் அல்லது சோடா வகை பானங்களை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வயிற்று வீக்கம் குறைந்து, செரிமானம் வேகமாகும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். ஆனால் இதில் உள்ள உண்மை என்ன என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர்.
உணவுக்குப் பிறகு அமிலத்தன்மையை குறைக்க குளிர்பானங்கள் உதவும் என்பது தவறான கருத்து என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்பானங்களில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்பன் டை ஆக்சைடு உள்ளது. அதோடு அமிலச் சேர்மங்கள், செயற்கை சுவை பொருட்கள் மற்றும் பல்வேறு இரசாயனங்கள் கலந்து இருக்கும். இவை வயிற்றுக்கும் கல்லீரலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. குளிர்பானம் குடித்தவுடன் வயிறு லேசாக உணரப்படுவது உண்மையான செரிமான நன்மை அல்ல.
உடல்நல பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், குளிர்பானங்களில் உள்ள அதிக சர்க்கரை மற்றும் அமில தன்மை செரிமான அமைப்பை மேலும் தூண்டுகிறது. இதனால் செரிமான சாறுகள் அதிகமாக சுரக்கின்றன. இது செரிமான மண்டலத்தின் உள்புற சுவர்களை பாதித்து அவற்றை பலவீனப்படுத்தும் அபாயம் உண்டு. நீண்ட காலமாக இவ்வழக்கம் தொடர்ந்தால், வயிற்று கோளாறுகள் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது.
சாப்பிட்ட பிறகு குளிர்பானம் குடிக்கும்போது ஏப்பம் வருவது, அதில் உள்ள கார்பன் டை ஆக்சைடு காரணமாகும். இந்த வாயு வெளியேறும் போது வயிறு வீக்கம் குறைந்தது போல தோன்றும். ஆனால் இது தற்காலிகமான உணர்வு மட்டுமே; அமிலத்தன்மை அல்லது செரிமான பிரச்சனையை இது தீர்க்காது.
இதற்குப் பதிலாக இயற்கை பானங்களைத் தேர்வு செய்வது நல்லது. தேங்காய் தண்ணீர் வயிற்றை ஆற்றும் தன்மை கொண்டது. மோர் செரிமானத்தை மேம்படுத்தி வாயு பிரச்சனையை குறைக்கும். சீரகம் சேர்த்த வெந்நீர் செரிமானத்தை சீராக்க உதவும். புதினா அல்லது துளசி சேர்த்து தயாரிக்கும் மூலிகை பானங்களும் நன்மை தரும்.
அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புசம் குறைய, குளிர்பானங்களைத் தவிர்ப்பதோடு மட்டும் இல்லாமல் உணவுப் பழக்கத்திலும் மாற்றம் அவசியம். மிக காரமான மற்றும் எண்ணெய் அதிகமான உணவுகளை குறைக்க வேண்டும். அதேபோல் வேகமாக சாப்பிடுவதற்குப் பதிலாக மெதுவாக நன்றாக மென்று சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்கும்.
