பொதுவாக தண்ணீர் குடித்தால் தாகம் தணிய வேண்டும். அதிக உடல் உழைப்பு, கடும் வெப்பம், காற்றில் ஈரப்பதம் குறைவு, அதிக வியர்வை, சோர்வு போன்ற காரணங்களால் தற்காலிகமாக தாகம் அதிகரிக்கலாம். ஆனால், போதுமான அளவு தண்ணீர் குடித்த பிறகும் மீண்டும் மீண்டும் அதிக தாகம் ஏற்படுவது உடல்நல பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
அதீத தாகத்துடன் வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, பலவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது உடல்நலத்தை பாதுகாக்க உதவும். புறக்கணிப்பது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
நீரிழிவு நோய்
அடிக்கடி தாகம் எடுப்பது நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதிக சர்க்கரையை வெளியேற்ற உடல் சிறுநீரை அதிகமாக உற்பத்தி செய்யும். இதனால் உடலில் நீர் சத்து குறைந்து, அதிக தாகம் ஏற்படும். இதனுடன் தலைவலி, சோர்வு, குமட்டல், வாய் வறட்சி போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.
ரத்தசோகை
ரத்தசோகை நோயும் அதிக தாகத்திற்கு காரணமாக இருக்கலாம். இந்த நிலையில், சிவப்பணுக்கள் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சரிவர எடுத்துச் செல்ல முடியாது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக நடைபெற நீர் தேவையும் அதிகரிக்கலாம். அதன் விளைவாக தாகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
புகையிலை மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகள்
புகைபிடித்தல் அல்லது புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் உடலின் சில உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கலாம். இதன் விளைவாக தற்காலிகமாக அதிக தாகம் ஏற்படலாம். மேலும், சில மருந்துகளின் பக்கவிளைவாகவும் வாய் வறட்சி மற்றும் அதிக தாகம் தோன்றலாம். பொதுவாக இது தற்காலிகமானதுதான். இருந்தாலும், தொடர்ந்து பிரச்சினை நீடித்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
மீண்டும் மீண்டும் அதிக தாகம் ஏற்படுவது சாதாரண விஷயம் அல்ல. அதன் காரணத்தை கண்டறிந்து சரியான சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது.
