Saturday, February 21, 2026

டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் செல்லாது – அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி

அமெரிக்காவின் அதிபராக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற பிறகு, அந்நாட்டின் குடியேற்றக் கொள்கையில் மாற்றங்கள், சில மானியங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், தனது வர்த்தகக் கொள்கைகளை ஏற்காத 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன.

இதற்கு எதிராக, அமெரிக்காவின் சில மாநில அரசுகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், ஒயின் இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சிறு வணிகக் குழுக்கள் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வரி விதிப்பு நடவடிக்கையின் மூலம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அதிபர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், இது அரசியலமைப்பு விதிகளை மீறுவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.

டிரம்ப் விதித்த வரிகளால், இறக்குமதி பொருட்களை நம்பியிருந்த வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாகவும், விலையேற்றம் மற்றும் பணிநீக்கங்களுக்கு வழிவகுத்ததாகவும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்று கீழமை நீதிமன்றங்கள் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் செல்லாது எனத் தீர்ப்பளித்தது. அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளர் நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரிகளை விதித்ததன் மூலம் அதிபர் தனது அதிகார வரம்பை மீறியுள்ளார் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Related News

Latest News