Saturday, February 21, 2026

குடும்ப வன்முறையில் பெண்களை ஆண்கள் அடிக்க தாலிபான் அரசு அனுமதி

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தாலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுதல், சமூக வாழ்வில் பங்கேற்பது போன்ற உரிமைகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பூங்கா, உடற்பயிற்சி கூடம், பொதுக் குளியலறை போன்ற இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்கும் உடை அணிய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெண்கள் உரக்கப் பேசுவதோ, பாடுவதோ கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக உரிமைகளை மறுக்கும் வகையில் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கும் புதிய சட்டத்தையும் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒரு ஆண் தனது மனைவி அல்லது குழந்தையை தாக்கினாலும், வெளிப்படையான இரத்த காயம் அல்லது எலும்பு முறிவு ஏற்படாவிட்டால் அது குற்றமாகக் கருதப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 90 பக்க குற்றவியல் சட்டத்திற்கு தாலிபான் தலைவர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சட்டத்தின் படி, கடுமையான காயம் ஏற்பட்டதையும், அதனை நீதிமன்றத்தில் நிரூபித்ததையும் பொறுத்தே குற்றவாளி என அறிவிக்கப்படும். அப்படிச் சாட்டப்பட்டாலும் அதிகபட்சமாக 15 நாட்கள் சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்துக்கு செல்லும் போது கணவர் அல்லது ஒரு ஆண் உறவினர் உடன் வர வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீதிபதியிடம் காயங்களை காட்டும் போதும் உடல் முழுவதும் மறைக்கும் உடை அணிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

திருமணமான பெண் கணவரின் அனுமதி இல்லாமல் உறவினர்களைச் சந்தித்தால், வன்முறையிலிருந்து தஞ்சம் தேடியாலும் கூட, மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த பாரபட்சமான தண்டனை முறை ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற அடிப்படை மனித உரிமை கொள்கைக்கு எதிரானது என சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related News

Latest News