Saturday, February 14, 2026

சட்டென எழுந்தால் தலை சுற்றுகிறதா? இது சாதாரண விஷயம் அல்ல., எச்சரிக்கும் மருத்துவர்கள்

நம்மில் பலருக்கும் திடீரென எழும்போதோ, அல்லது காலையில் படுக்கையிலிருந்து எழும்போதோ தலைச்சுற்றி உலகம் சுழலுவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலவும், கால்கள் தள்ளாடுவது போலவும் தோன்றும். இதை பலரும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.

ஆனால் இவ்வாறான நிலை அடிக்கடி ஏற்பட்டால் அது கவனிக்க வேண்டிய விஷயம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென எழுந்து நிற்கும்போது ரத்த அழுத்தம் குறைவதால் ஏற்படும் இந்த நிலை மருத்துவத்தில் Orthostatic hypotension என்று அழைக்கப்படுகிறது.

புவிஈர்ப்பு விசை மற்றும் ரத்த ஓட்டம்

நாம் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ இருந்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் திடீரென எழுந்து நிற்கும்போது, புவிஈர்ப்பு விசை காரணமாக ரத்தம் கால்களை நோக்கி இழுக்கப்படுகிறது. இதனால் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவு தற்காலிகமாக குறைகிறது.

சாதாரணமாக, நமது நரம்பு மண்டலம் இந்த மாற்றத்தை உடனடியாக உணர்ந்து, இதயத் துடிப்பை அதிகரித்து, ரத்தக் குழாய்களைச் சுருக்கி, மூளைக்குத் தேவையான ரத்தத்தை மீண்டும் மேலேற்றும். இந்த செயல் தாமதமானாலோ அல்லது சரியாக நடக்கவில்லையோ என்றால் ரத்த அழுத்தம் குறைந்து தலைச்சுற்றல் ஏற்படும்.

மயக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள்

இந்த நிலைக்கு பல காரணங்கள் உள்ளன. உடலில் நீர்ச்சத்து குறைவது முக்கிய காரணமாகும். ரத்த சோகை, நரம்பு மண்டல கோளாறுகள் போன்றவை இருந்தாலும் இது ஏற்படலாம். வயதானவர்களில் உடலின் இயல்பான எதிர்வினை வேகம் குறைவதால், அவர்களுக்கு இது அதிகமாகக் காணப்படுகிறது.

சில ஆய்வுகள், நடுத்தர வயதில் அடிக்கடி ரத்த அழுத்தம் குறைவது, பிற்காலத்தில் Dementia போன்ற ஞாபக மறதி நோய்களுக்கு முன்னோட்ட அறிகுறியாக இருக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.

தடுக்கும் முறைகள்

இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க சில எளிய பழக்கவழக்க மாற்றங்கள் போதுமானது.
படுக்கையிலிருந்து எழும்போது திடீரென எழாமல், முதலில் மெதுவாக உட்கார்ந்து சில விநாடிகள் காத்திருக்க வேண்டும். பின்னர் கால்களை தரையில் வைக்கவும், ரத்த ஓட்டம் சீராகிய பிறகு மெதுவாக எழுந்து நடக்கவும் வேண்டும்.

நாள்தோறும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். உடலில் நீர்ச்சத்து மற்றும் உப்புச் சமநிலை சரியாக இருந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

எப்போதாவது தலைச்சுற்றல் ஏற்பட்டால் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அடிக்கடி இது நிகழ்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். ஏனெனில் மயக்கம் காரணமாக கீழே விழுந்தால் எலும்பு முறிவு அல்லது தலையில் காயம் ஏற்படலாம். குறிப்பாக முதியவர்கள் குளியலறை அல்லது படிக்கட்டுகளில் இருந்தபோது தலைச்சுற்றினால் அது ஆபத்தான விபத்தாக மாற வாய்ப்பு உள்ளது.

Related News

Latest News