தமிழ்நாட்டில் பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பரோட்டா முக்கிய இடம் பெறுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பரோட்டா அதிகமாக உண்ணப்படுவது வழக்கம். மைதா மாவால் தயாரிக்கப்படும் இந்த உணவு உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
மைதா சார்ந்த உணவுகள் செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் போது செரிமானக் கோளாறுகள் உருவாக வாய்ப்பு அதிகம். செரிமான பிரச்னைகள் நீடித்தால் அது பெருங்குடலை பாதித்து, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. 2025ஆம் ஆண்டு மட்டும் 1,00,097 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 53,022 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது இருமடங்காக உயர்ந்திருப்பது கவலைக்குரியது. மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.
பெண்களிடம் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கருமுட்டைப் புற்றுநோய் ஆகியவை அதிகமாக காணப்படுகின்றன. ஆண்களிடம் நுரையீரல், இரைப்பை, வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் அதிகம் பதிவாகின்றன.
சமீப காலங்களில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலைக்கிடமானதாக பார்க்கப்படுகிறது. இது நீண்டகால செரிமான கோளாறுகளுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
எளிதில் செரிமானமடையும் சத்தான உணவுகளை உட்கொள்வது உடல்நலத்திற்கு நல்லது. ஆனால் துரித உணவுகள் மற்றும் மைதா அடிப்படையிலான உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக பரோட்டா, பீட்சா போன்ற உணவுகளை இளம் தலைமுறையினர் அதிகமாக விரும்பி உண்ணுவதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இரவு நேரங்களில் பரோட்டா போன்ற கனமான உணவுகளை சாப்பிடுவது தூக்கமின்மை, அசிடிட்டி, செரிமான கோளாறு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
தற்போது பெருங்குடல் புற்றுநோய் அபாயம் குறித்து எழுந்துள்ள எச்சரிக்கை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், மைதா சார்ந்த உணவுகளை கட்டுப்படுத்தி, சத்தான மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.
