Monday, February 2, 2026

இனி ஆதார் கார்டு விவரங்களை நீங்களே லாக் செய்யலாம்: எப்படி தெரியுமா?

ஆதார் கார்டு இன்று மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. 12 இலக்கங்களை கொண்ட ஆதார் எண், அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற அத்தியாவசியமாக உள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் முதியோர் உதவித் தொகை, அரசு மானியங்கள் போன்ற பல சேவைகள் வரை அனைத்திற்கும் ஆதார் எண்ணே முதன்மையாக கேட்கப்படுகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில், ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள், கைரேகை, கண் கருவிழி பதிவு போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல்களை தேவையில்லாமல் மூன்றாம் தரப்பினரிடம் பகிர வேண்டாம் என ஆதார் ஆணையம் (UIDAI) அடிக்கடி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஆதார் விவரங்களை நமது அனுமதியின்றி யாரும் பயன்படுத்த முடியாதபடி பாதுகாக்க ‘ஆதார் லாக்’ என்ற வசதியை UIDAI வழங்கியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தினால், உங்கள் ஆதார் எப்போது, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நீங்களே கட்டுப்படுத்த முடியும். ஆதார் லாக் செய்யப்பட்டிருந்தால், பயோமெட்ரிக் சரிபார்ப்பு, ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு உள்ளிட்ட எந்த ஆதார் அங்கீகார செயல்பாடுகளும் செயல்படாது. இதனால், உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் ஆதாரைப் பயன்படுத்த முடியாது.

ஆதார் லாக் செய்யப்பட்டிருந்தாலும், தேவையான இடங்களில் ‘விர்சுவல் ஐடி’யை பயன்படுத்தலாம். விர்சுவல் ஐடி என்பது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தற்காலிக 16 இலக்க எண் ஆகும். இது உங்கள் உண்மையான ஆதார் எண்ணை வெளிப்படுத்தாமல் சேவைகளைப் பெற உதவுகிறது.

ஆதார் லாக் செய்ய, ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ‘எனது ஆதார்’ (My Aadhaar) பகுதியிற்கு செல்ல வேண்டும். அங்கு ‘ஆதார் லாக் / அன்லாக்’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து, ‘UID லாக்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் ஆதார் எண், முழுப் பெயர் மற்றும் பின் கோடை பதிவு செய்து, ஓடிபி மூலம் ஆதாரை லாக் செய்யலாம். தேவையான போது இதையே மீண்டும் அன்லாக் செய்வதற்கும் வசதி உள்ளது. இந்த வசதி மூலம், உங்கள் ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

Related News

Latest News