புளூம்பெர்க் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப செய்தியாளர் மார்க் குர்மன் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய ஐபோன் திட்டத்தில் புதிய வகை மாடலை பரிசீலித்து வருகிறது. ஐபோன் ஃபோல்டை விட சிறிய அளவில், கிளாம்ஷெல் (clamshell) வடிவமைப்பில் உருவாகும் இந்த மாடல் “ஐபோன் ப்ளிப்” (iPhone Flip) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த ஐபோன் ப்ளிப் மாடல், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஐபோன் ஃபோல்டு மாடலுக்குப் பிறகு அறிமுகமாகலாம். ஆனால், தற்போது வரை இந்த திட்டம் உறுதியான கட்டத்தில் இல்லை என்றும், இறுதியாக இந்த மாடல் சந்தைக்கு வரும் எனத் தெளிவாக கூற முடியாத நிலை உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கசிந்துள்ள தகவல்களின்படி, ஐபோன் ப்ளிப் சதுர வடிவமைப்புடன் இருக்கும் என்றும், இது மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா மற்றும் சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 7 போன்ற கிளாம்ஷெல் ஸ்மார்ட்போன்களைப் போலவே தோற்றம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முதல் மடிக்கக்கூடிய ஐபோனான ஐபோன் ஃபோல்டுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் நம்புகிறது. அதனால், மடிக்கக்கூடிய ஐபோன்களுக்கு பொதுவாகவே அதிக தேவை உருவாகும் என்றும், வாடிக்கையாளர்கள் பல்வேறு வடிவமைப்புகளில் ஐபோன்களை எதிர்பார்க்கத் தொடங்குவார்கள் என்றும் மார்க் குர்மன் தெரிவித்துள்ளார்.
